நல்ல தமிழில் எழுதவேண்டுமா? - 1.(புலவர் நன்னன் அவர்கள்)
புல்லுருவி
---------------
நல்ல மரத்திலொரு புல்லுருவி பாய்ந்தாற் போல் என்னும் தொடரில் வரும் புல்லுருவி என்பது மா முதலிய மரங்களில் முளைத்து அம் மரங்களின் கிளை போலவே வளர்ந்து ஏறக்குறைய அம் மரத்தின் ஒரு பகுதி போலவே தோன்றும் அம் மரத்தின் சத்தை உறிஞ்சி வாழும் அது அம் மரத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது. மேலும் அதன் மெலிவுக்கும் அழிவுக்கும் பயன்படவும் கூடும். தோற்றம் எப்படியிருந்தாலும் விளைவு முற்றிலும் வேறுபட்டிருக்கும் அஃதாவது மாமரப் புல்லுருவி மாங்காய் காய்க்காது.
நெற்பயிரின் ஊடே அதற்கிடப்படும் உரம், நீர் போன்றவற்றை உட்கொண்டு நெற்பயிர் போலவே வாழும் களையை [நெல் மிலட்டி] ஓரளவு புல்லுருவி வகையில் சேர்க்கலாம். நெற்பயிர் பூத்து நெல் மணிகள் தோன்றும் போது தான் நெல் மிலட்டியின் பூ, கதிர் போன்றவை வேறுபட்டிருப்பதால் அக் களையைத் தெளிவாக வேறு படுத்தி யறிய முடியும்.
மாந்தரிலும் சிலரைப் புல்லுருவி என்று குறிப்பிடுவதுண்டு. அவர்கள் ஒரு குடும்பத்திலோ, ஓர் இனத்திலோ, ஒரு நாட்டிலோ தோன்றி அவற்றால் பயன் பெற்று வாழ்ந்தாலும், அவற்றின் சிதைவுக்கும் அழிவுக்கும் துணை போவதும் அவர்களியல்பாகும். பிறர் உழைப்பில் வாழ்வதையே தம் இயல்பாகக் கொண்ட அப் புல்லுருவிகளைப் பிரித்தறிய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக