முகம் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்
முகம்
---------
முகம் என்னும் விழுமிய தமிழ்ச் சொல்லை சில வடமொழி அறிஞர்கள் தம் மொழிச் சொல் என்கின்றனர். அது தமிழ்ச் சொல்லே என்பதைப் பரிதிமாற் கலைஞர் உறுதி செய்தார். வடமொழியில் வாய் என்பதைக் குறிக்கும் சொல்லையே முகத்திற்கும் பயன்படுத்தினர் என அவர் நிறுவினார்.
எம் பேராசிரியருள் ஒருவராகிய மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை என்னும் அறிஞர் முகம் என்னுஞ் சொல் செந்தமிழ்ச் சொல்லே என நிறுவினார். முகத்தல் என்பதற்கு உள் வாங்குதல் என்பது பொருள். சான்றுக்குச் செம்பில் நீரை முகத்தல் என்பதைக் காணலாம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐந்தும் முகத்துக்கு வாயில்களாகும். ஆகவே முகக்கக் கூடிய பொறிகள் அனைத்தும் அமைந்துள்ள இடம் முகம் எனப் பெயர் பெறுதல் முற்றிலும் பொருத்தமானதே என்றார் மன்னார்குடி சோமசுந்தரனார்.
கருத்துகள்
கருத்துரையிடுக