சமயங்களின் அரசியல் - தொ.ப.

நன்றி : பூ.கோ.சரவணன் அண்ணன்

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் சமயங்களின் அரசியல் நூலை வாசித்து முடித்தேன். சமயங்களின் அரசியல் எனும் ஒரு நூலும்,இவருக்கும் சுந்தர் காளிக்கும் நிகழ்ந்த சமயம் சார்ந்த உரையாடல் இன்னுமொரு நூலாகவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேதம் என்பதை மறை என்றதற்கான காரணமே அதை மற்ற வர்ணத்தினருக்கு மறைக்கப்பட்டது,மறுக்கப்பட்டது என்பதே ஆகும். 

தமிழகம் நோக்கி வந்த வேதம் கற்ற பிராமணர்கள் தமிழ் பெண்களை மணந்து கொண்டதால் அவர்களின் பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் ஆனது என்றாலும் வழிபாட்டு இடங்களில் சமஸ்க்ருதத்தில் தான் தொடர்ந்தார்கள். வேதம் வேறு,இறைவன் வேறு என்று வைதீகத்தில் ஊறிய சம்பந்தர் சொன்னார். தன் கோத்திரத்தை பெருமையோடு வேறு கூறிக்கொண்டார். புண்ணிய நீராடல் பாவங்களை போக்கும் என்றும் அவர் சொன்னார். அப்பரோ வேதமும்,இறைவனும் ஒன்றே என்று புரட்சிக்குரல் எழுப்பினார்;சாத்திரம் பேசும் சழக்கர்காள் என்று முழங்கினார். சந்தியாவந்தனம் செய்யும் பிராமணரை நோக்கி வினா தொடுக்கிறார்,ஈசனை நினைப்பதே நீராடலை விட சிறந்தது என்றும் குறிக்கிறார். சம்பந்தரும்,அப்பரும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை;இருவரும் வெவ்வேறு காலத்தவர்கள் என்று ஆசிரியர் கருதுகிறார்

கோயில்கள் எப்படி அதிகார மையங்களாக மாறின என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார். எண்ணற்ற நிலங்கள் பெற்று எளிய மக்களிடம் இருந்து வெட்டி வேலை பெற்றும்,பாலை இலவசமாக பெற்றும் அவர்களின் வாழ்வை எப்படி கோயில்கள் நசித்தன என்றும் பதிவு செய்கிறார். பவுத்தமும்,சமணமும் எப்படி ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தின என்றும் குறிக்கிறார். கள்ளுண்ணாமை,புலால் மறுத்தல் ஆகியனவற்றால் அவ்விரு மதங்களும் தமிழகத்தில் காணாமல் போயின என்றாலும் சமணம் தாய்வழிபாட்டை தனக்குள் புகுத்திக்கொண்டதால் ஓரளவுக்கு தப்பியது. 

அதிகார மையங்களாக இருந்த பெருங்கோயில்கள் பொலிவிழந்து இருக்கின்றன;தாய்வழிபாடு கொண்ட மக்களின் கிராமத்து தேவதைகள் காலங்களைக்கடந்து நிற்கின்றன;இவற்றை பெரியார் இறுதிவரை எதிர்க்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வீரமாமுனிவர் கிறிஸ்துவத்தை பரப்ப வந்த பொழுது அதனால் தான் கித்தேரியம்மாள் அம்மானை என்றும்,மாதாவுக்கு பெரியநாயகி என்றும் பெயரிடுகிறார். தமிழகத்தில் இஸ்லாமிய மதம் வணிகத்தால் தான் பரவியது வாளால் அன்று என்பதையும் ஆதாரங்களோடு காண்பிக்கிறார் 

ஆழ்வார்களில் பலர் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்பதால் அவர்களின் மூர்த்தங்களை வழிபட மாட்டேன் என்று மறுத்த வைகானசர் பற்றியும் பதிவு செய்கிறார். தமிழ் கடவுளான முருகனின் துணையான வள்ளியை பின்தள்ளி தெய்வானை மூலம் பிரமாணமயப்படுத்தும் முயற்சி எப்படி நாட்டார் வழக்கியலில் காணாமல் போனது என்றும் பேசுகிறார். 

திராவிடரின் தெய்வமான உரத்தின் அன்னை மூத்ததேவி படிப்படியாக கோயில்களை விட்டு வைதீகத்தால் வெளியேற்றப்பட்டு மூதேவி என்று தூற்றுதலுக்கு ஆளானாள். வாக்தேவி எனும் சமணரின் சொற்களின் தலைவி வெள்ளை ஆடை அணிந்து சரஸ்வதி ஆக வைதீகம் ஆக்கிக்கொண்டது. இன்றும் ஏன் தேவாரம் கருவறைக்கு வெளியே பாடப்படுகிறது,ஏன் மாணிக்கவாசகர் சோழ நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை ? கோயில்களில்,திருமணங்களில் ஏன் திருவாசகம் ஓதப்படுவதில்லை ? எந்த தத்துவார்த்த வேறுப்பாடு அவரை தனித்து ஒதுக்க வைத்தது என்று கேள்வி தொடுக்கிறார் 

கழுகுமலையும்,வள்ளியூரும் சமணரிடம் இருந்து கைப்பற்றபட்டு முருகன் கோயில்கள் ஆயின. திருப்புல்லாணி,திருச்சுழியும் அபகரிக்கப்பட்ட கோயில்கள் தான். ஏன் திருவரங்கம்,சிதம்பரம் இரண்டும் ஆகம விதிகளுக்கு மாறாக தெற்கு நோக்கி இருக்கிறது என்று கேள்வி எழுப்பிவிட்டு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பவுத்தர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட இடமே என்றும் பதிவு செய்கிறார். சைவத்தின் கரத்தில் சமணத்தின் ரத்தம் படிந்திருக்கிறது என்பதை வலியோடு பதிவு செய்கிறார் 

இஸ்லாமியர் படையெடுப்புக்கு பின்னர் அச்சம் நீக்கும் பாத்திரமாக கவுமார வழிபாட்டை மீட்க அருணகிரி நாதர் முயல்கிறார் என்பதையும்,எப்படி கிறிஸ்துவ,இஸ்லாமிய மதங்கள் பெண்களுக்கு உரிமைகளை ஹிந்து மதம் போலவே தரத்தவறியது என்றும் பதிவு செய்கிறார். தமிழகத்தில் வெங்கடாசலபதியோ,ராமரோ விஜயநகர ஆட்சிக்காலத்துக்கு முன்னர் கோயில்களில் இல்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கலாம். ராமர் என்பவர் அரசதிகாரத்தின் அடையாளம் என்று நோக்கவேண்டும் என்றும் குறிக்கிறார்.

சமயம் என்பதும் தெய்வ நம்பிக்கை என்பதும் வேறு சைவமும்,வைணவமும் தொடாத எத்தனையோ ஊர்களில் உள்ளூர் தெய்வங்களில் வழிபாடு எக்காலத்திலும் இருந்துள்ளது. சமயங்கள் என்பது அரசனோடு கைகோர்த்து கொண்டு அதிகாரத்தை செலுத்தும் எளியவர்களை விலக்கி வைக்கும் சுரண்டும் பீடங்களாகவே இருந்துள்ளன என்று ஆணித்தரமாக பதிவு செய்யும் தவறவிடக்கூடாத நூல். 


பக்கங்கள் : 176
விலை : 85
விகடன் பிரசுரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்