புறமா? புரமா? - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்

புறமா? புரமா?
-------------------------
மேற்காட்டப்பட்டுள்ள சொற்கள் பற்றிய சிக்கல் ஒன்று இப்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அச் சொற்களில் உள்ள றகர, ரகர ஆட்சி பற்றியதே அச் சிக்கல். இதற்கு அவை ஆளப்பட்டுள்ள இடங்கள் முதலியன பற்றி மட்டும் எண்ணினால் போதுமா? போதாதென்றே கருதுகிறோம் யாம். இதற்கு இலக்கணங்களில் தான் தெளிவு தேடப்படவேண்டும். "எல்லாவற்றுக்கும் இலக்கணம் கூற முடியவில்லை. கூறப்பட்டுள்ளவற்றின் துணையால் கூறப்படாதவற்றுக்கும் அம மரபு வழுவாது ஏற்ற முறையை வகுத்துக் கொள்வது நற்றமிழறிஞர் கடமை." என்பது போன்ற கருத்தை தொல்காப்பியம் தந்துள்ளது.
இந்த புறனடை காட்டியுள்ள முறைப்படி தீர்க்கப்பட்ட ஒரு தீர்வை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். கருப்பு என்பதற்கு ரகர உகரம் [ரு] பயன்படுத்தத் தக்கதா என்னும் ஐயம் எழுந்தது. அது எழவேண்டியிருந்தது ஏனெனில் கார், கருமை, கரியன், கரியள், கரியர், கரிது, கரியன என்றார் போல் உள்ள எல்லா இடங்களிலும் இடையினமே பயன்படுத்தப் படுவதால் கருப்பு என்பதற்கும் இடையினமே பயன்படத் தக்கது. இதில் ஐயத்திற்கே இடமில்லை. ஆயினும் கருப்பு என்னும் சொல்லுக்கு பஞ்சம் என்றொரு பொருள் இருத்தலாலும் அதிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டவேண்டி இருத்தலாலும் பஞ்சச் சொல்லுக்கு இடையின ரகர உகரத்தை [ரு] கருமைச் சொல்லுக்கு வல்லின றகர உகரத்தையும் [று] பயன்படுத்தலாம் என வரையறுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தி அச்சிக்கல் தீர்க்கப்பட்டது.
அதே முறையை இங்கும் பயன்படுத்தினாலென்ன என்று யாம் வினவுகிறோம்.
புறம், புறப்பொருள், புறவழி, புறத்திணை என்பன போன்ற இடங்களில் வல்லின றகர அகரம் [ற] ஆளப் பட்டுவருவதால் அதை மாற்றத் தேவையில்லை.
கபாடபுரம், முப்புரம், திரிபுரம், விழுப்புரம், இராமநாதபுரம், இராசிபுரம் என்பனவும் தருமபுரி, மதுராபுரி போன்றனவும் ஊர் எனும் பொருளில் அச் சொல்லோடு தொடர்புடையனவாய்க் காணப்படுதலால் ஊரின் இடையின ரகர் மெய்யோடு தொடர்புடைய அதன் பிரவடிவங்கலாகிய ரகர இகரம் [ரி] ரகர உகரம் [ரு] ஆகிய [தருமபுரி, தர்மபுரம்] இடையின எழுத்துகளையே ஆளலாம் என நாம் வரையறுத்துக் கொண்டால் என்ன என்று எண்ணிப் பார்ப்போமே.
பதிவிடுபவர் வேண்மாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்