சுந்தர எழுத்துகள்|மௌனத்தில் விரிந்த மொட்டுகள்|2
மௌனத்தில் விரிந்த மொட்டுக்கள்... - 2
- கரிசல்பாலா.
சுந்தர எழுத்துகள் மூன்றாம் பகுதிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
முன்பெல்லாம் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வந்தால் கூட
குழந்தைகளின் கண்களையும் காதுகளையும் மூடிவிடுகிற பெற்றோர்களை கண்டிருப்போம்.
அல்லது வேகமாக ரிமோட்டை எடுத்து வேறு சேனலை மாற்றி விடுகிற பெற்றோரை
பார்த்திருப்போம் இது வீட்டில். குழந்தைகள் பெண்கள், பெண்பிள்ளைகள் இருந்தால்
அவர்கள் முன் தவறாகப் பேசக்கூடாது என கவனமாக இருக்கிற மனிதர்களைக் கண்டிருப்போம்.
அதே போல ஆண்கள் இல்லாத அல்லது தெருச் சண்டை என்று வந்து விட்டால் யாரையும் பொருட்படுத்தாது கெட்ட வார்த்தைகளை பெண்களும் பேசிட
பார்த்திருப்போம். அதை கண்டிக்கிற பெரியவர்களையும் கண்டிருப்போம் இது சமூகத்தில் .
தமிழகத்திற்கு கெட்ட வார்த்தைகள் என்று குறிப்பிடப்படக்கூடிய சொற்கள் ஒன்றும் புதிதில்லை. அதே வேளையில் அதை கண்டிக்கிற போக்கும் புதிதில்லை தமிழர்க்கு. ஆனால், மக்கள் தம் வாழ்க்கையில் பாரபட்சமின்றி இவற்றை அனுமதிப்பதையும் நாம் மறுக்கவியலாது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கெட்டவார்த்தைகளில் பேசுவது குறித்து யாருக்கும் பயமில்லை. எல்லா இன மக்களைப் போலவும் தமிழர்கள் திட்டத் தெரிந்தவர்கள் தான் என சு.ரா.வும் குறிப்பிட்டு இருக்கிறார். எழுத்தாளர் பெருமாள்முருகன் கூட கெட்டவார்த்தை பேசுவோம் என்கிற கட்டுரை நூலை எழுதியுள்ளார் என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது ஆகும்.
ஆனால், ஒரு எழுத்தாளன் இலக்கிய நெறிக்குட்பட்டு
ஒரு சொல்லைப் பயன்படுத்தினாலும் அதை ஆபாசம் என்று கூறி இதழ்கள், இதழாசிரியர்கள் ஒதிக்கிடும்
போக்கை இடைப்பட்ட காலத்தில் எழுத்தாளர்கள் அவசியம் எதிர்கொண்டே ஆக வேண்டும்
என்கிற சூழலும் நிலவியிருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இதை தொடங்கி வைத்த பெருமை
இதழ் ஆசிரியர்களுக்கே உண்டு. இன்று வெவ்வேறு தளத்தில், முன்னணியில் எழுதிக்கொண்டு
இருக்கிற மிகச்சிறந்த எழுத்தாளர்களும் தங்களுடைய ஆரம்பகால எழுத்துகளில் இத்தகைய
நிலையை எதிர்கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை.
புதிய சிந்தனைகளும், மக்களின் எதார்த்த வாழ்வின் உண்மை நிலையை வெளிப்படுத்தி
நிற்கும் படைப்புகளும் ஆபாசத்தை தாங்கி எழுதப்பட்டவை என அதிகமாக ஒதுக்கப்பட்டும் வெட்டப்பட்டுமே
பிரசுரமாகின. ஆனால், இவையெல்லாம் ஆபாசம் என்று கூறி மக்களையும் அப்படியே பார்க்க
வைத்து, குறிப்பிட்ட சூழலில் அவை
எழுத்துலகிற்கு மட்டுமே என அட்டைப் படங்களில் ஆபாசங்களை வெளியிட்டு விற்பனையைப்
பெருக்கிக் கொள்ளும் இவர்கள், சுமந்து கொண்டிருக்கும் இந்த பவித்திரத் தன்மை போலியானது என்று சு.ரா.
குறிப்பிடுவதும் சரியெனத்தான்படுகிறது. ஆனால் இது பழைமைவாதம் என சு.ரா. குறிப்பிடுவதிலும்
ஒரு மாறுபாடு தோன்றத்தான் செய்கிறது.
பழைமை இலக்கியங்களில் இதழ்கள் ஆபாசம் என்று கற்பிக்கும் பல சொற்களை நல்ல
சொற்களாகவே சங்க இலக்கியங்களில், பக்தி இலக்கியங்களில் கூட பயன்படுத்திடக்
காண்கிறோம்.
சுந்தர எழுத்துகள் -௩ காண,
https://youtu.be/vvwfrY9tCXw
ஆக இத்தகைய மனநிலை , இடைக் காலத்தில்
உருவாக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. எளிய மனிதர்களின் வாழ்வில் சாதாரணமாகப்
பயன்படுத்தப்படுகிற, அவர்களின் வாழ்வில் ஒரு கூறாக அமைந்திருக்கிற, அதுவரையிலும் ஆபாசம்
என்றே தோன்றாத, சொற்களுக்கு, அறிவுச் சூழலில்
ஆபாசம் என்ற போர்வையை போர்த்திய இச்செயல்பாடுகளின் தாக்கத்தை நாம் “மக்கள் பேசும்
மொழியால் அவர்களை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என வகைபடுத்திப் பார்க்கும் மனநிலை”
வரைக்கும் பார்க்க முடியும்.
அதே வேளையில் ஊடகங்கள்
சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அவை நினைத்தால் ஒரு புதிய கருதுகோளை
மனநிலையை சமூகத்தில் ஆழமாக விதைக்கவும் முடியும் அவற்றிற்கு தேவையான போது, விலக்கு
அளித்து ஆபாசமான புகைப்படங்கள் ஆபாசத்திற்க்குள் வராது, மக்களின் உணர்ச்சிகளை இப்புகைப்
படங்கள் கிளர்ச்சி அடையச் செய்யாது என அவற்றின்
மீது பவித்திரத் தன்மையைப் பூசி
புதிய கற்பிதங்களை உருவாக்கிடவும் முடியும் என்கிற விடயத்தைப் புரிந்துகொள்ள
வேண்டும். அதே வேளையில் சு.ரா. சொன்ன காலகட்டத்தில் இதழ்கள் சமூகத்தின் மீதான
பொறுப்புணர்ச்சி என்பதில் இருந்து
பொருளீட்டல் என்கிற மனநிலைக்கு மாறிய வேகத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அதே வேளையில் சு.ரா.வின் இக்கட்டுரை வாயிலாக, அவ்வப்போது மக்களுக்கு
இது போன்ற மாற்றங்களை சரியாக கவனித்து அவற்றை கண்டித்து சமூகத்தில் நிகழ்கிற
நிகழ்வுகள் அவற்றை தொடர்ந்து நிகழ்த்தியவர்கள் என சமூகத்தின் அசைவுகளை
எழுத்தாளனானவன் தன்னுடைய எழுத்துகளில் பதிவு செய்வதும் அவற்றை, மக்களின்
கவனத்திற்கு கொண்டு சேர்ப்பதும் கடமையாக கருதி இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து
கொள்ள முடிகிறது.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக