பழமரபும் நவீனச் சாதனைகளின் புறக்கணிப்பும்.
சென்ற காணொளியில் பழைய மரபுகள் புதிய கலை சிருஷ்டிகள் தோன்றுவதற்கு குந்தகமாக இருக்கின்றதென சு.ரா. குறிப்பிடுவதாகக் கூறினேன். அதை வாசிக்க நீங்கள் கேட்டீர்கள். ஏன் அப்படி சு.ரா குறிப்பிடுகிறார்? கேள்வி எழுப்பினீர்களா?
பழைய மரபுகள் என்று சு.ரா குறிப்பிடுபவை, இலக்கியங்களின் இலக்கணங்களையோ அல்லது புலவர்கள் பின்பற்றிய வழிமுறைகளையோ அல்ல. இலக்கியங்களை நுகர்வுசெய்யும் வாசகனை, அவன்தம் மனநிலையை பழைய மரபு என்ற ஒற்றைப் பதத்தால் குறிக்கிறார் சு.ரா.. வாய்மொழி இலக்கியம் உட்பட ஏடேறிய இலக்கியங்கள் அனைத்தையும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தமை உ.வே.சா போன்றோரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து காண்கிறோம்.
ஒரு நல்ல படைப்பை பாதுகாக்க இன்றிருப்பது போன்ற சூழல் அன்றில்லை. இன்று யாரும் வாங்கிப் படிக்கவில்லை என்றாலும், அச்சிடப்பட்ட நூல்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இல்லியா? யாரும் விற்கவில்லை என்பதற்காக தூக்கி குப்பையில் வீசப்போவதில்லை.
எந்த நூலகத்திலும், யார் வாசிக்கா விட்டாலும் நூல்கள் என்னவோ அதே இடத்தில் பாதுகாக்கத்தான்படுகின்றன. ஆனால் இப்படியான நிலை அன்று இல்லை.
ஒரு படைப்பை பாதுகாக்க வேண்டும் என்றால், பெரும் முயற்சிக்குப்பின்னால், சிறப்புமிக்க கவனத்தோடு (இதை சு.ரா. விசேச அக்கறையோடு என குறிப்பிடுகிறார். ) பாதுகாக்க வேண்டும். (ஒரு நூலைப் படியெடுக்க வேண்டுமென்றால் கூட பெரும் கூட்டுமுயற்சி தேவைப்பட்டிருக்கிறது காரணம் அன்று ஓலைச்சுவடிகளில் எழுதும் முறை கைக்கொள்ளப்பட்டிருந்தமையே.) இப்படியான நிலையில், எண்ணிறைந்த மட்டமான செய்யுட்கள் அழிந்து போயிருக்க வேண்டும் அல்லவா? என்பது சு.ராவின் கேள்வியாக இருக்கிறது. (நல்ல படைப்பகள் மட்டுமே விசேச அக்கறையோடு பாதுகாக்க வேண்டிய நிலை அன்றிருந்தது என்பதை மறக்க வேண்டாம்) ஆனால், அப்படியான சூழலிருந்தும் நிறைய மட்டமானவை இன்றளவிலும் நீண்ட இப்படியான காலச்சூழலைத்தாண்டி நம்மிடையே வந்துசேர்ந்திருக்கின்றன.
அப்படியானால், காலத்தின் விமர்சனத்தன்மையில் சந்தேகம் உருவாகிறதல்லவா? காலம் இப்படியான இலக்கியங்களை ஒருபுறம் ஆதரித்தல்லவா வந்திருக்கிறது. இரசனை உள்ளவர்கள் இருந்திருந்தால் இப்படியான இலக்கியங்களை நோக்கயிருக்க வேண்டுமே. அப்படி நோக்கியிருந்தால் இன்றுவரை நீண்டிருக்க விட்டிருக்கமாட்டார்கள் அல்லவா?
இலக்கியங்களை வெறுமனே முன்னோர் சொத்தாகவும், புனிதப்பொருளாகவும் மட்டுமே பார்த்துப்பழகியவர்களால் (ரசனையற்றவர்களின் மூடபக்தி) இரசனையோடு அணுகுவதற்கு எப்படித்தோன்றும். வணக்கத்திற்குரிய ஒன்றாக்கி, பாதுகாத்தவர்களின் இப்படியான மூடபக்தியால், படைப்புகளின் சிருஷ்டித்தன்மையை அன்றி அதன் ஸ்தூல வடிவத்தை மட்டுமே அடுத்த தலைமுறைகட்கு கொடுக்க முடிந்திருக்கிறது என்று இலக்கியம் இவ்வளவு தூரம் பயணித்ததன் பிண்ணனியை விமர்சிக்கிறார்.
இதனால்தான், பழைய இலக்கியங்களை புனிதமான ஒன்றாக அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை வழிபடக்கூடிய போற்றக்கூடிய மனநிலை உருவாகியிருக்கிறது. படைப்பின் சிருஷ்டித்தன்மையை நோக்காது நவீனங்களை புறக்கணிக்கிற போக்கும் நிகழ்கிறது என்கிறார். இப்படியான பழமரபு சிந்தனைக்கு முன் நவீன இலக்கிய படைப்பாக்கத்தில் நிகழ்கிற சாதனை புறக்கணிப்பையே சந்திக்கின்றன. இதற்கு ஜீவன் துறந்து நிற்கும் பழைமையின் பொக்கான அம்சங்களைப் போற்றுவதே காரணம். அதை இன்றும் வற்புறுத்தி வருவதே (காலம்,சூழல் கடந்தும்) புதிய கலை சிருஷ்டிகள உருவாவதற்கு குந்தகமாக இருக்கிறது என்கிறார்.
இப்படியான மனநிலையை அடைந்துள்ள நாம், பொதி சுமந்து கூன்விழுந்தவர்களாக உருவகப்படுத்தப்படுகிறோம். படைப்பாக்கச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் மறுத்து இப்படியான பழமரபு மனிநிலைக்கு அடிமையாகிக் கிடப்பதை சுந்தரராமசாமி இவ்வெழுத்துக்களின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகிறார்.
சில கேள்விகளும் பதில்களும் :
1. இலக்கியங்களை சிறப்பு கவனத்தோடு பாதுகாப்பதனால் மட்டமான செய்யுட்கள் எப்படி அழியும்?
பிற மொழி, மதத்தினரிடம் இலக்கியத் தரத்தை எதிர்நோக்கி நிகழ்ந்த வாதுகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எது சிறந்த இலக்கியம் என நடந்த இப்படியான அனல்/புனல் வாதங்கள் தம்மவர்களுக்கும் பொருந்தும் என்பதோ, நம்மின் முன்னோர்களே நம்மொழியிலேயே தந்திருப்பினும் அதன் தரம் குறித்து சிந்திக்க வேண்டும், ஆராயவேண்டும். அல்லனவற்றைத் தள்ள வேண்டும்: நல்லனவற்றை காக்கவேண்டும் என்றோ எண்ணி முன்னவர்கள்போல், மிக கவனத்தோடு காத்திருந்தால் நல்லன அல்லாமல் இப்படி, மட்டமான செய்யுட்களும் காலம் கடந்து நிற்கும் நிலை எட்டியிருக்காது. சுருங்கக் கூறின், வழிபடாமல் எடுத்து வாசித்திருந்தால் பல நல்ல இலக்கியங்கள் காக்கப் பட்டிருக்கலாம். அதே வேளையில், மட்டமானவை அழிக்கப்பட்டிருக்கலாம் இரண்டுமே நடவாமல் போயிருக்கிறது என்பது சு.ரா.வின் கருத்து. எதற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றமெனக்கடியும் பெரியோர் கொண்ட இவ்வுலகத்தில் பின்னத்திய இலக்கிய விமர்சகர்களின் மீதான நம்பிக்கை என்பதும் சு.ரா.வின் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகின்றன. அதனால்தான் காலத்தின் விமர்சனத் தன்மையின் மீதே சந்தேகம் எழுகிறது என்கிறார்.
2. நவீன சாதனைகளுக்கு எப்படி பழமரபு குந்தகம் விளைவிக்கிறது?
பழமரபு என்று சு.ரா குறிப்பிடுவது இரண்டு என நான் கருதுகிறேன். ஒன்று, ஓலைச்சுவடிகளை வணங்க மட்டுமே செய்த மனிதர்களின் மூடபக்தி. அதாவது வணங்குவதற்கும் காப்பதற்கும்; மட்டுமே உரியன, முன்னோர்களின் ஆசிர்வாதம், இவற்றை வணங்க வேண்டும், காக்க இயலா வேளையில்; நீரில் இடவேண்டும் என்பன போன்ற நம்பிக்கைகளே இத்தகைய மூடபக்தி.
இரண்டாவது, பழம்பெருமை பேசுதல், மேற்சொன்ன நம்பிக்கையின் விளைவாய் மக்கள் கொண்டிருக்கும் கருதுகோள். அதாவது, முன்னோர்கள் சொன்னதே சரி, அன்று போல் இன்று இல்லை, அப்படி இல்லை இப்படி இல்லை. அது போலல்ல என்று பழமைக்கு ஒப்பிட்டுப் பேசுவது, பழமையான இலக்கியங்களில் உள்ள குறைகளை ஏற்க மறுப்பது.
இவ்விரண்டு மனநிலையுமே நவீன இலக்கியச் சாதனைகளைப் புறக்கணிக்கின்றன. ஒன்று பழமையோடு ஒப்பிட்டு புதிய வசன சாதனைகளைக் குறைவாக மதிப்பிடுவது:ஏற்றுக்கொள்ள மறுப்பது. இப்படியான புதிய சாதனைகளை இலக்கியத்தின் புத்தாக்கமென்றோ, வளர்ச்சி என்றோ கருதாமல், பழம்பெருமையை மட்டுமே தூக்கிக் கொண்டும் சுமந்துகொண்டும் நிற்பது. அதனால்தான் சு.ரா. சொல்கிறார், பொதி சுமந்து கூன்விழுந்தவர்கள் போல் இத்தகைய பழமரபுச் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள் விளங்குகிறார்கள் என்று. இத்தகையோரின் இப்படியான சிந்தனைகளால்தான் இலக்கிய சாதனைகள் புறக்கணிக்கப்படுவதும்: குந்தகம் விளைவதும் நிகழ்கிறது என்பது அவரின் முடிவு.
குறிப்பு:
மட்டமான செய்யுட்கள் என சு.ரா. எவற்றை குறிப்பிடுகிறார் என்பதை குறிப்பாய் நான் அறிகிலேன். மட்டமானவை என்கிற மதிப்பீடு வாசிக்கும் நபருக்கு நபர் மாறுபடும் எனவே, உங்கள் வாசிப்பில், நீங்கள் கண்டடைபவற்றை கருதிக்கொள்ளுங்கள். அவரின் வாசிப்பில் அவருக்குப்பட்டதையே இங்கு குறிப்பிடுகிறார். ஆனால், நிகழ்வுகள் என்னவோ இன்றளவிலும் உண்மையில் இதுதான் நிகழ்கிறது. எதை என்பதை விடுத்து எதற்காக என்பதை ஆராய்ந்தோமானால், பழமரபு என்று சு.ரா. குறிப்பிடும் மனநிலையை தவிர்க்க இயலும்.
- தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக