கொரோனா கவிதை
கொரோனா கற்றுத் தந்த அனுபவம்! - கவிதை
தென்பொதிகையின் தென்றல்காற்று ஆளில்லா உங்கள்
தேயிலைத் தோட்டத்தைத் தாண்டி தவழ்கின்றது!.
கோடிகோடியாய் இறைத்து நீங்கள் சுத்தம் செய்வதாய்க் கூறிக்கொண்ட
கங்கையிங்கே உங்கள் ஆலைகளின் அசுத்தம் நீங்கி
ஆடித்திளைக்கிறது!.
அரிய வகை டால்பீன்! கங்கை டால்பீன்
அது அமுதகங்கையில்
இனம்பெருக்கி ஓடித்திரிகிறது!
வானுயர்ந்த காடழித்து
நீங்கள் நட்டுவைத்ததாய்க் கணக்கெழுதிய மரங்கள் காணாது
கணக்கை நிகர்செய்ய பறவைகள் விதைவிதைக்கக் கிளம்பின!
ஆழப் புதைந்து பல ஆயிரமாய் மரங்கள் வளர!
ஆழப் புதைய அங்கே
காட்டுப்பன்றிகள் உழுதுகொண்டிருக்கின்றன!
ஏற்றுமதி செய்தே வருவாய் ஈட்ட
நீங்கள் ஓட்டிய இயந்திரங்கள் மாய்த்த காடுகளில்
இன்று மரகதப்புறாக்கள் உயிர்த்தெழத் தொடங்கின!
நீங்கள் சுட்ட யானைகளின் மொட்டுப் பாதங்களில்
சுவர்க்கம் பூக்கப் பழகின!
எங்கள் வாழ்வு திரும்ப
நாங்கள் தந்த வாய்ப்பு இது என்றன!.
ஆலைக் கழிவு கலக்கா ஆறுபல
ஆழ்கடல் திரும்பின
பாலைச் சுரம் பொசுக்க சாகும் மீன்கள்
வாலை மீனோடு வாஞ்சை கொண்டன!
இயற்கை உடலின்
இறந்த செல்கள்
இயல்பாய்த் தானே இறப்பைத் துறந்தன!
செயற்கை சுவாசம் போதுமென்றே
செய்திகள் வெளியிடச் சேர்ந்து கத்தின!
முடங்கிப் போன உங்களால் தான்!
இயங்கிட முடிந்தது எங்களால்தான்!
முடங்கிப் போன இயற்கை
முனுமுனுக்க மூச்சுவிட்டது
பூமிப்பந்து!
பொங்கிவந்த கடல்புயலால்
கழுவிக்கொண்டது மண் அதுஉடலை.
புழுப் பூச்சி புறா மேயப்
பிறந்தோமென்று சிரித்துமகிந்து சிறுத்துக் கொண்டது!
மீண்டு திரும்பி
மீதி இயற்கை
மீந்த மானுடரிடம் பேசிக் கொண்டது!
சிதைத்தால் இனி சிதைப்போமென்று!
சிறியோர் கூட்டம்
மானுடம் என்று உணர்த்திச் சென்றது
பெருநோய் இன்று!
உரியோர் பூமிக்கு யாமே என்று
உணர்த்திக் கொண்டு இயற்கை சென்றது
தோழா!
இடைவந்த நீ இயற்கை விருந்து
கொரோனா என்பது உன்பேதமை மருந்து!
கருத்துகள்
கருத்துரையிடுக